GET HELP - if in immediate danger, call 000

Menu

ஆண்கள் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்வதற்கான உதவி

உங்கள் நடத்தை மாற வேண்டும் என்பதை ஒப்புக்கொள்வதற்கு நிறைய துணிவு தேவை.

நீங்கள் சிறந்த மனிதராக, துணைவராக, தந்தையாக அல்லது குடும்ப உறுப்பினராக மாறுவதற்கான உங்கள் பயணத்தில், நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதை இந்தப் பக்கம் விளக்குகிறது. 

உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்:

  • நான் எப்போதாவது ஒரு குடும்ப உறுப்பினரிடம் கூச்சலிட்டேனா அல்லது கோபமாக கத்தினேனா?
  • நான் எப்போதாவது ஒரு குடும்ப உறுப்பினரை அடித்திருக்கிறேனா, அறைந்திருக்கிறேனா, உதைத்திருக்கிறேனா, தள்ளியிருக்கிறேனா அல்லது துரத்தியிருக்கிறேனா – அல்லது அப்படிச் செய்வேன் என்று பயமுறுத்தியிருக்கிறேனா?
  • நான் எப்போதாவது ஒரு குடும்ப உறுப்பினரை தகாத வார்த்தைகள் அல்லது அவமதிக்கும் பெயர்களால் அழைத்திருக்கிறேனா? நான் அவர்களை எப்போதும் விமர்சிக்கிறேனா அல்லது குறை கூறிக்கொண்டே இருக்கிறேனா?      
  • நான் எப்போதாவது என் துணைவர் தனக்காகப் பணம் செலவழிப்பதைத் தடுத்திருக்கிறேனா?
  • நான் எப்போதாவது ஒரு குடும்ப உறுப்பினரை பயமுறுத்தியிருக்கிறேனா?
  • நான் எப்போதாவது ஒரு குடும்ப உறுப்பினரின் முன் அல்லது அவர்மீது கண்ணாடிக்குவளை, நாற்காலி அல்லது டிவி ரிமோட் போன்றவற்றை எறிந்திருக்கிறேனா?
  • என் துணைவர் விரும்பாத பாலியல் செயலைச் செய்யும்படி நான் எப்போதாவது வற்புறுத்தியுள்ளேனா?
  • என் துணைவர் தான் செய்ய விரும்பிய ஒன்றைச் செய்வதைத் தடுக்க முயற்சித்திருக்கிறேனா? (உதாரணமாக, நண்பர்களுடன் வெளியே செல்வது, வேலை செய்வது, ஏதாவது படிப்பது)
  • எனது LGBTIQA+ துணைவரின் தனிப்பட்ட விடயங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவேன் என்று எப்போதாவது மிரட்டியிருக்கிறேனா?

இந்தக் கேள்விகளில் ஏதேனும் ஒன்றிற்கு அல்லது அதிகமானவற்றிற்கு நீங்கள் ‘ஆம்’ என்று பதிலளித்திருந்தால், கீழே உள்ள எங்கள் சேவைகள் உங்களுக்கு உதவலாம்.

ஆண்களுக்கான பரிந்துரை சேவை (Men’s Referral Service)– 1300 766 491

வருடத்தின் 365 நாட்களும், 24 மணிநேரமும் கிடைக்கும்

ஆண்களுக்கான பரிந்துரை சேவை (MRS) உங்களுக்கு உளவியல் ஆலோசனை மற்றும் நடத்தை மாற்ற திட்டங்கள், பெற்றோருக்கான திட்டங்கள், மது மற்றும் பிற போதைப்பொருள் தொடர்பான திட்டங்கள், சுகாதார ஆதரவுகள் மற்றும் தங்குமிட சேவைகள் பற்றிய தகவல்களை வழங்க முடியும்.

இந்த சேவை 24 மணிநேரமும், வாரத்தின் ஏழு நாட்களும், ஆண்டு முழுவதும் கிடைக்கிறது – எனவே உங்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் உதவி கிடைக்கும்.

ஆண்களுக்கான பரிந்துரை சேவை யாருக்கு உதவுகிறது?

  • முன்னர் தீங்கான முறையில் நடந்துகொண்டிருந்தவராகவோ  தற்போது அப்படி நடந்துகொண்டிருப்பவராகவோ இருந்து, தங்களது நடத்தையை மாற்ற விரும்பும் ஆண்கள்.
  • ஒரு ஆணின் தீங்கான நடத்தை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள்.
  • குடும்ப வன்முறை அல்லது வீட்டு வன்முறையில் ஈடுபடுகின்றவர்களின் அல்லது அதனால் பாதிக்கப்படுகின்றவர்களின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் அல்லது வேலைத்தள உறவுகள் – அவர்களுக்கு எப்படி உதவுவது என்பதைப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள்.
  • வன்முறையில் ஈடுபடும் அல்லது அதனால் பாதிக்கப்படும்  ஒருவருக்கு உதவ விரும்பும் தொழில்துறை நிபுணர்கள்.

நீங்கள் ஆண்களுக்கான பரிந்துரை சேவையை அழைக்கும் போது:

  • நீங்கள் யாரென்பதைக் கூறாமல் விடலாம்
  • நீங்கள் கூறுவது கவனமாக கேட்கப்படும் அதேநேரம் மரியாதையுடன் நடத்தப்படுவீர்கள்
  • உங்கள் நடத்தையை மாற்றுவதற்கான அடுத்த நடவடிக்கையை எடுக்க உதவும் உள்ளூர் சேவைகள் பற்றிய தகவல்களைப் பெறுவீர்கள்.

உதவிபெற 1300 766 491 என்ற எண்ணை அழைக்கவும். இலவச  மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவை (TIS National) அல்லது எமது  webchat மூலமாகவும் நீங்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

குறுகிய காலத்திற்கான தலையீட்டு சேவை (Brief Intervention Service)

குறுகிய காலத்திற்கான தலையீட்டு சேவை (BIS) என்பது ஒரு தேசிய தொலைபேசிவழியான ஆலோசனைத் திட்டமாகும். ஆண்களுக்கான நடத்தை மாற்றத் திட்டத்தை பயன்படுத்த நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு இது உதவக்கூடும். உங்கள் பகுதியில் அந்தத் திட்டம் கிடைக்கவில்லை என்றாலும், அல்லது நீங்கள் ஆங்கிலம் பேசுவதில்லை என்றால்கூட இதன் மூலம் உதவி பெற முடியும்.

குறுகிய காலத்திற்கான தலையீட்டு சேவை என்பது சில அமர்வுகளாக நடைபெறும் குறுகிய கால தொலைபேசிவழியான ஆதரவுத் திட்டமாகும். இந்தத் திட்டம் உங்களுக்கு பின்வரும் வழிகளில் உதவ முடியும்:

  • உங்கள் நடத்தையைப் புரிந்துகொள்ளுதல்
  • உங்கள் நடத்தைக்கு நீங்கள் எவ்வாறு பொறுப்பேற்க கற்றுக்கொள்ளலாம் என்பதை ஆராய்தல்
  • பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உறவுகளைக் கொண்டிருப்பதற்கும், பாதுகாப்பான குடும்பங்களை உருவாக்குவதற்கும் புதிய வழிகளைக் கற்றுக்கொள்வது.

குறுகிய காலத்திற்கான தலையீட்டு சேவையை பயன்படுத்த விரும்பினால், முதலில் 1300 766 491 என்ற எண்ணில் ஆண்களுக்கான பரிந்துரை சேவையை(MRS) அழைக்க வேண்டும். ஒரு ஆலோசகர் உங்கள் பின்னணியைத் தெரிந்துகொண்டு, பின்னர் குறுகிய காலத்திற்கான தலையீட்டு சேவையை அணுக உங்களுக்கு உதவுவார்.

இலவச மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவை (TIS National) அல்லது எமது webchat மூலமாகவும் நீங்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் தனியுரிமையும் இரகசியத்தன்மையும்

ஆண்களுக்கான பரிந்துரை சேவை மற்றும் குறுகிய காலத்திற்கான தலையீட்டு சேவை ஆகியவை No to Violence(NTV)ஆல் இயக்கப்படுகின்றன. தரமான சேவையை வழங்கவும், எங்கள் சேவைகளை அணுகும் மற்றும் பயன்படுத்தும் அனைவரின் உரிமைகளையும் பாதுகாக்கவும் No to Violence உறுதி பூண்டுள்ளது.

தனியுரிமைச் சட்டம் 1988 (Cth)இன் கீழ், உங்கள் தனிப்பட்ட தகவல்களை எவ்வாறு பயன்படுத்துவோம் என்பது குறித்த தகவல்களை No to Violence உங்களுக்கு வழங்க வேண்டும். உங்கள் தகவல் தனிப்பட்டதாகவும் இரகசியமாகவும் பாதுகாக்கப்படும். ஆனால் உங்கள் பாதுகாப்பு அல்லது பிறரின் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்தால், அல்லது சட்டப்படி அந்தத் தகவலை பகிரவேண்டிய தேவை எழுந்தால் மாத்திரம் அந்த தகவல் பகிரப்படும்.

நீங்கள் எங்களை தொடர்பு கொள்கின்ற போது, உங்கள் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்த அனுமதி தருகிறீர்களா எனக் கேட்கப்படும். அப்போதுதான் நாங்கள் உங்களுக்கு உதவ முடியும்.  எங்கள் சேவைகளை அணுகும் நபர்களைப் பற்றிய பொது தகவல்கள், ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படலாம் – எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எத்தனை பேர் அழைத்துள்ளனர் என்பதுபோன்ற தகவல்கள்.  உங்கள் அழைப்பு பதிவு செய்யப்படும், மேலும் தரம் உயர்த்தல்  மற்றும் பயிற்சி நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படலாம்.

உங்கள் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்த மேலதிக தகவல்களையும், எங்கள் தனியுரிமைக் கொள்கையையும் படிக்க https://ntv.org.au/about-us/privacy/ என்ற இணைப்பைப் பார்வையிடுங்கள். நீங்கள் கருத்துக்களை வழங்கவோ அல்லது புகார் அளிக்கவோ விரும்பினால், அதற்கான தகவலும் அங்கே வழங்கப்பட்டிருக்கும்.

மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவையை (TIS National) எவ்வாறு அணுகுவது

மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்த்துரைப்பு சேவை (TIS National) என்பது நீங்கள் ஆங்கிலம் பேசவில்லை எனில், ஆண்களுக்கான பரிந்துரை சேவையுடன் தொடர்பு கொள்ள விரும்பினால், உங்களுக்கு உதவக்கூடிய ஒரு இலவச சேவையாகும்.

TIS National சேவையை பயன்படுத்த:

  • உங்கள் தொலைபேசியில் 131 450 ஐ அழைக்கவும்
  • உங்களுக்குத் தேவையான மொழி எதுவென்பதை ஆபரேட்டரிடம் கூறவும்
  • தேவையெனில், உங்கள் மொழிபெயர்த்துரைப்பாளர் எந்த பாலினமாக இருக்கவேண்டுமென விரும்புகிறீர்கள் என்பதையும் தெரிவிக்கவும் (முடியுமானால் அதற்கும் ஏற்பாடு செய்யப்படும்)

ஆபரேட்டர், உங்கள் மொழி பேசும் மொழிபெயர்த்துரைப்பாளருடன் உங்களை இணைப்பார். அவரது உதவியுடன் நீங்கள் ஆண்களுக்கான பரிந்துரை சேவையுடன் எளிதாக உரையாடலாம்.

உங்கள் உரையாடல் 30 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும் என்று நீங்கள் நினைத்தால், தயவுசெய்து மொழிபெயர்த்துரைப்பாளருக்குத் தெரியப்படுத்துங்கள். இதன்மூலம் அவர்கள் உங்களுக்கான நீண்ட உரையாடல் நேரத்தை முன்பதிவு செய்யலாம்.  

Webchat(இணையவழி உரையாடல் சேவை) 

நீங்கள் ஆன்லைன் படிவத்தைப் பயன்படுத்தி ஒரு ஆலோசகருடன் பேச விரும்புகிறீர்கள் என்றால், எமது ஆண்களுக்கான பரிந்துரை சேவை webchat ஐ பயன்படுத்தலாம்.

இணைப்பை அழுத்தியவுடன், webchat படிவம் தானாகவே இணையப் பக்கத்தில் திறக்கப்படும்.  உங்கள் விவரங்களை பதிவு செய்துவிட்டு சேவை தரும் பதிலுக்காக காத்திருங்கள்.

எங்கள் webchat ஊடாக ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆங்கிலத்தில் படிக்கவும் எழுதவும் முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், இந்தச் சேவை உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கலாம்.

இந்த மொழிபெயர்க்கப்பட்ட இணையப்பக்கம் மற்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ள சேவைகளுக்கு, ஆஸ்திரேலிய அரசின் சமூக சேவைகள் துறை மூலம் நிதியளிக்கப்படுகிறது.